×

சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குசீட்டில் பேனாவால் எழுதி செல்லாத ஓட்டாக்கிய அதிகாரி: தில்லுமுல்லு செய்து பாஜ வெற்றி ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றார். இதில் தில்லுமுல்லு செய்து பாஜ வெற்றி பெற்றிருப்பதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகராக உள்ள சண்டிகரில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக இத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடக்க இருந்த நிலையில் தேர்தல் அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சண்டிகர் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மேயர் பதவிக்கு பாஜ சார்பில் மனோஜ் சோங்கரும், ஆம் ஆத்மி சார்பாக குல்தீப் குமாரும் போட்டியிட்டனர். இந்தியா கூட்டணியின் முதல் களமாக இத்தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இணைந்து களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 35 உறுப்பினர்கள் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜவுக்கு 14 கவுன்சிலர்கள் உள்ளனர். முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் சண்டிகர் எம்பி கிரோன் கெர் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளார். ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7, சிரோமணி அகாலி தளத்திற்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.

இந்நிலையில், வாக்குச்சீட்டில் கவுன்சிலர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் வாக்குகளை எண்ணினார். அப்போது, 8 வாக்குச்சீட்டில் சில குறியீடுகள் இருப்பதாக கூறி அவற்றை செல்லாத வாக்குகளாக அறிவித்தார். இறுதியில் பாஜ வேட்பாளர் மனோஜ் 16 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளர் 12 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி வேட்பாளருக்கு கிடைத்த 8 ஓட்டுகளே செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், இது அப்பட்டமான முறைகேடு என குற்றம்சாட்டி மூத்த துணை மேயர், துணை மேயர் தேர்தலை ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன. அந்த பதவிகளும் பாஜவுக்கு சென்றன. வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியே வாக்குச்சீட்டில் எழுதுவது போன்ற வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கான திட்டமிட்ட சூழ்ச்சி என ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த தேர்தல் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அறிவித்துள்ளன. இது ஒரு கறுப்பு நாள் என பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கூறி உள்ளார். இதனால் சண்டிகரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய தேர்தலில் எந்த எல்லைக்கும் போவார்கள்
ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில், ‘‘சண்டிகர் மேயர் தேர்தலில் பட்டப்பகலில் முறைகேடு நடந்துள்ளது. ஒரு மேயர் தேர்தலுக்கே இவர்கள் இப்படி நடந்து கொண்டால், தேசிய தேர்தலில் எந்த எல்லைக்கும் போவார்கள். இது மிகவும் கவலை அளிக்கிறது’’ என்றார். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணி தனது முதல் போட்டியிலேயே பாஜவிடம் வீழ்ந்துள்ளது. அவர்களின் கணக்கும், கெமிஸ்டிரியும் வேலை செய்யவில்லை என்பதை இது காட்டுகிறது’’ என கிண்டலடித்துள்ளார்.

The post சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குசீட்டில் பேனாவால் எழுதி செல்லாத ஓட்டாக்கிய அதிகாரி: தில்லுமுல்லு செய்து பாஜ வெற்றி ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chandigarh mayoral election ,BJP ,Aam Aadmi ,Congress ,Chandigarh ,Aam Aadmi Party ,Punjab, ,Haryana ,Dinakaran ,
× RELATED ஸ்வாதி மலிவால் விவகாரம்: ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியீடு